Saturday, November 18, 2006

மருத்துவ மாணவி கௌசல்யாவை சந்தித்தேன்

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!
கௌசல்யாவுக்கு கல்வி உதவி குறித்த எனது முந்தைய பதிவு உங்கள் பார்வைக்கு:

முதற்கண், கௌசல்யாவின் கல்விக்கு உதவித் தொகை வழங்கிய நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழியாக, முதலாண்டு தேர்வு முடிந்து, ஒரு நீண்ட விடுமுறைக்குப் பின், தனது இரண்டாம் வருட மருத்துவப் படிப்பைத் தொடர, சொந்த ஊரான அந்தியூரிலிருந்து கௌசல்யா சென்ற வாரம் சென்னை வந்து சேர்ந்தார். கடந்த 2 மாதங்களில் பல முறை அவரிடம் தொலைபேசியிருக்கிறேன். சென்னை வந்தவுடன் என்னை தொடர்பு கொண்டார்.

இன்று ஸ்டான்லி கல்லூரி விடுதிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி விட்டு, நண்பர்களிடம் திரட்டிய கல்வி நிதியிலிருந்து அவருக்கு வேண்டிய உதவித் தொகையை அளிக்கலாம் என்ற முடிவுடன் எனது நண்பன் சங்கருடன் கிளம்பினேன். சென்ற வருடம் கௌசல்யாவை டெக்கான் குரோனிகள் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது உடன் வந்த பெருமழை, இன்றும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது ! ஆனால், இது சிறுமழையே :)

கௌசல்யாவை சந்தித்துப் பேசினேன். சென்ற வருடம் பார்த்ததை விட, சற்று தைரியமாகத் தோன்றினார். ஒரு வருட நகர (விடுதி) வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் வருடத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் பற்றி வினவினேன். கூடப் படிக்கும் மாணவ/மாணவியர் பலரும் (இவரைப் போலவே) திறமைசாலிகள் என்பதால், competition தீவிரமாக இருப்பதாக அவர் கூறியது, பலரும் அறிந்தது தானே! பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ஒரு கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கௌசல்யா, முயற்சி எடுத்துப் படித்து, 70 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்பது என் கருத்து. முதல் வருட மருத்துவப் படிப்பில் அவர் பயின்ற பாடங்கள், Anatomy, physiology மற்றும் Bio-chemistry ஆகியவை.

அவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரது உயர் கல்விக்கு பல நல்ல உள்ளங்கள் மனமுவந்து உதவி செய்திருப்பதை எடுத்துக் கூறி, இரண்டாமாண்டில் இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் அறிவுரை கூறினேன் (நான் ஓர் அட்வைஸ் அண்ணாசாமி என்பது வேறு விஷயம்:)) மீண்டும், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !

கௌசல்யா நன்றாகப் படித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும், வருவார் என்ற திடமான நம்பிக்கையும் உள்ளது. அவ்வப்போது தாய் தந்தையற்ற அவரை சந்தித்துப் பேசி ஊக்கமளித்தலும் அவசியம் என்று தோன்றுகிறது, செய்வேன் ! கௌசல்யாவின் கல்விக்கு வேண்டி இந்த வருடம் திரட்டப்பட்ட மொத்த உதவித் தொகை 105559 (பழைய பாக்கியையும் சேர்த்து). வரவுக் கணக்கை, உதவி செய்த நண்பர்களூக்கு ஏற்கனவே மடல் வழி அனுப்பி விட்டேன். இந்த நேரம், தமிழ்மணத்திற்கும், திண்ணைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

உதவிய நண்பர்கள் விவரம் பின் வருமாறு:
செந்தில் குமரன், ஹரிஹரன், மஞ்சூர் ராசா, டோண்டு, கணேஷ் (சேலம்) alias S.V.Ganesh, H.ரங்கராஜன், குழலி, சந்தோஷ், துளசி, முகமூடி, மோகன் அண்ணாமலை, அபுல் அப்சல், ராமச்சந்திரன், ராஜா.ரங்கா, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வெட்டிப்பயல் என்கிற பாலாஜி.

இது தவிர, பொதுவில் பெயர் வெளியிட அனுமதிக்காத 12 நண்பர்கள் மற்றும் ஓர் இஸ்லாமியச் சகோதரர்.

ஒவ்வொரு ஆண்டும், கௌசல்யாவுக்கான டியூஷன் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விடும். எனவே, விடுதிக்கான முழு ஆண்டு கட்டணமான ரூ.18000-க்கு (இத்தொகையிலிருந்து ஒவ்வொரு மாதத்திற்கான செலவை விடுதி நிர்வாகம் கழித்துக் கொள்ளும்) ஸ்டான்லி மாணவிகள் விடுதிக்கான வார்டன் பெயருக்கு ஒரு காசோலையும், கௌசல்யாவின் இதரச் செலவுகளுக்கு (புத்தகங்கள், உடை ...) அவர் பெயரில் ரூ.10000-க்கான காசோலையும் உங்கள் சார்பில் வழங்கினேன். "நீங்கள் கொடுத்ததே இந்த வருடத்திற்குப் போதுமானது சார்" என்று அப்பெண் மனநிறைவோடு கூறினாலும், ஏதேனும் தேவையிருந்தால் தயங்காமல் கேட்குமாறும், நன்றாகப் படிப்பது குறித்து மட்டும் யோசிக்குமாறும் கௌசல்யாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

திரட்டிய தொகையில், வைப்பு நிதியாக (fixed deposit) வங்கியில் உள்ள ரூ.40000 மற்றும் கௌசல்யாவுக்கு அளித்த ரூ.28000 போக மீதமுள்ள தொகையில் இன்னும் சில ஏழை மாணவ/மாணவிகளுக்கு (இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் நானும், ராம்கியும் சிலரைப் பற்றி விசாரித்து விட்டோம், இன்னும் சிலர் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது) உங்கள் அனுமதியுடன் உதவலாம் என்பது எங்கள் எண்ணம். நாம் கூட்டாக உதவி செய்த / செய்யப்போகிற மாணவ/மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று உறுதி செய்வதும், உதவித் தொகையை உண்மையான தேவை இருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் செலவிடுவதும் எங்கள் கடமை என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கல்விக்கு உதவும் இம்முயற்சிக்கு தொடர்ந்து நீங்கள் தரும் பேராதரவு தான், எனக்கும், விரைவில் சம்சார சாகரத்தில் நீந்த இருக்கும் 'ரஜினி' ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

***** 259 ******

21 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

மிகுந்த மன நிறைவை அளித்தப் பதிவு. நல்ல மனதுடன் நீங்கள் செய்யும் இந்த உதவி கண்டிப்பாக தக்கப் பலன் அளித்து கூடிய சீக்கிரம் டாக்டர் கௌசல்யாவாக அந்த மாணவி வாழ்வில் முன்னுக்கு வருவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு.கார்த்திகேயன் said...

நல்ல முயற்சி பாலா.. கௌசல்யாவின் படிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Sivabalan said...

பாலா

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

அன்பு பாலா

அருமையான பணி. நம்மால் முடிந்த அளவு ஏழை மாணவர்களுக்கு உங்கள் மூலம் உதவுவோம்.

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

ராம்கிக்கு வாழ்த்துக்கள்.


பின்குறிப்பு: எனது பெயர் மஞ்சூர் ராசா (manjoor is in Nilgiris near ooty)

தருமி said...

தொடர்ந்து இன்னும் உதவி அனுப்பலாமோ?

Santhosh said...

Good Job Bala.

துளசி கோபால் said...

நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள் பாலா.

கெளசல்யா படிச்சு வாழ்க்கையிலே முன்னுக்கு வரணும். அவுங்க
முழு வைத்தியரானவுடன், முதல் பேஷண்ட்டா நான் போறேன்:-)

அடடா.....நம்ம ராம்கியோட காலுலெ கட்டா? ட்சு ட்சு...

வாழ்த்து(க்)கள் ராம்கி. நல்லா இருங்கப்பா எல்லோரும்.

அன்பு said...

மிக நல்லசெயல், தொடர்ந்து செய்யுங்கள்.
காசு கொடுப்பதோடு உதவி முடிந்துவிடவில்லை என்பதை புரியவைத்து - தொடர் கவனிப்பு, தேவையறிந்து உதவும் மிக நல்ல விஷயம் செய்கின்றீர்கள். பாராட்டுக்களும், நன்றியும்.

ramachandranusha(உஷா) said...

உதவிய நண்பர்களுக்கும், முனைப்புடன் செயல்ப்பட்ட பாலா மற்றும் ராம்கிக்கும் பாராட்டுகள். இனி மேலும் மேலும் நம்மால் ஆன உதவிகளை தேவையானவர்களுக்கு செய்வோம் என்று நம்புகிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

வலைப்பூவுலகின் வலிமையின் நல்ல வெளிப்பாடாக இதை நான் காண்கிறேன்!

ஆற்றலை ஆக்கமான செயல்களுக்குப் பயன்படுத்துவோம் இது மாதிரி பொறுப்புணர்வோடு!

உதவ வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள் பாலா!

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார், கார்த்திகேயன், சிவபாலன்,
ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.

enRenRum-anbudan.BALA said...

மஞ்சூர் ராசா,
தொடரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல.
உங்கள் பெயர் குறித்து, பதிவில் இருந்த சிறுபிழையை திருத்தி விட்டேன் :)

enRenRum-anbudan.BALA said...

தருமி சார்,
நன்றி. தாங்கள் அடுத்த ஆண்டு முயற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.

சந்தோஷ்,
தொடரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல.

enRenRum-anbudan.BALA said...

துளசி அக்கா,

இந்த முயற்சிக்கு, பிள்ளையார் சுழி போட்டவர்களில் நீங்களும் ஒருவர் அல்லவா ! நன்றி.
//கெளசல்யா படிச்சு வாழ்க்கையிலே முன்னுக்கு வரணும். அவுங்க
முழு வைத்தியரானவுடன், முதல் பேஷண்ட்டா நான் போறேன்:-)
//
டீச்சர் பேஷண்ட் எல்லாம் ஆக வேண்டாம் :) கௌசல்யாவுக்கு தங்கள் வாழ்த்துக்களே போதும்.

எ.அ. பாலா

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
தொடரும் அன்புக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.

enRenRum-anbudan.BALA said...

பெயர் வெளியிட விரும்பாத நண்பரின் கருத்து:

**************************
கல்விக்கு உதவுதல் எனக்கு என்றும் விருப்புடையதே!

மாணவர்கள் தாம் நன்றாகக் கற்று,நாளை தம்மிலும் மெலியாரைக் கண்டபோதெல்லாம் உதவத்தக்கவராகவும்,நாட்டுக்கு நல்லவர்களாகவும்,உலகத்தில் தமிழ்பேசுவோரின் ஆற்றலை வெளிப்படுத்தி அறிவுடைய சமுதாயமாக இருக்கட்டும்.

அதுவே எனது விருப்பம்.

**************************

ஊக்கத்திற்கும் நன்றி, சார்.

said...

மிக நல்ல இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

enRenRum-anbudan.BALA said...

Hariharan, உஷா மற்றும் அனானி நண்பரே,
நன்றி !

enRenRum-anbudan.BALA said...

Hariharan, உஷா மற்றும் அனானி நண்பரே,
நன்றி !

said...

இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

said...

When I read this posting, I got feeling of happiness. Thanks Bala.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails